Thirunalure polinchiamman kovil history

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

திருநாளுர் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் திருக்கோவில் தல வரலாறு.

Sri Polinchiamman kovil  thirunalure history.
Thirunalure polinchiamman kovil history
திருநாளுர் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் திருக்கோவில்

Thirunalure polinchiamman temple history.

      இந்தியத் திருநாட்டில் தமிழர்களுக்கு என்று தனிச் சிறப்பு| வாய்ந்த மாநிலமான தமிழகத்தில் மா, பலா, வாழை என்று முக்காள் விளையும் பூமியான புதுக்கோட்டை மாவட்டத்தில் அறத்தை தாங்கி நிற்கும் கோட்டையாக விளங்கக்கூடிய (அறம்+தார்கி) அறந்தாங்கி வட்டத்தில், பிறந்த நாட்டிற்கு பெருமை தேடி பிறந்த ஊருக்கு புகழைச் சேர்" என்ற பாடசி வரிக்கேற்ப திருநாளூர் கிராமத்தில் 18 அடி உயர கருப்பர், 54 அடி உ அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ பொழிஞ்சியம்ம திருக்கோவிலான இந்த ஆலயத்தில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் 33 அடி உயர குதிரையின் சிலை அமையப்பெற்றுள்ள குளமங்களம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யண் திருக்கோவிலும், சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் குளத்தின் தரை மட்டத்தில் இருந்து 81 அடி உயர சிவன் சிலை அமையப்பெற்றுள்ள சிவன் கோவிலும், 

          இந்த மூன்று ஆலயங்களும் மிக குறுகிய தொலைவில் இந்த ஆலயத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் அமையப்பெற்றுள்ளது என்பது மட்டுமல்லாது ஆசியத் துணைக்கண்டத்திலேயே மிக உயரமான சிலைகளில் ஒன்றாகவும் அமையப்பெற்றுள்ளன. இத்தனை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான திருநாளூர் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் திருக்கோவில் தல வரலாற்றினை ஊர் பெரியவர்கள் மற்றும் பரம்பரை கோவில் பூஜகர் சித.நடராஜன் (எ) சித.சாமிநாதபிள்ளை அவர்கள் மூலமாகவும் விவரங்களைக் கேட்டறிந்து நீண்ட நாட்களாக சேகரித்து வைத்திருந்த தகவல்களை கிராமத்தார்களும், சுற்று வட்டார கிராமத்தார்களும் ஆன்மீக மெய்யன்பர்களும் பக்தகோடிப் பொதுமக்களும் படித்து விவரமறிந்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அம்பாளின் புகழ் திக்கெல்லாம் பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் எண்ணத்தில் இந்த பதிவு பதிவிடபடுகிறது.

திருநாளுர் கிராமத்தின்  பெயர் காரணம்.

திருஞான சம்பந்த சுவாமிகள் அருள் செய்த தேவாரம் முதல் மூன்று திருமுறைகளில் (இரண்டாம் திருமுறை) பாடலும், அதற்குரிய விளக்கமும் :

கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கு அன்று 
எல்லா அறன் உறையும் இன்னருளால் சொல்லினான்
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர் மயானத்தைச் 
சொல்லாதவர் எல்லாம் செல்லாதவர் தொல்னெறிக்கே.

விளக்கம் :

          ★ கல்லால மரத்தின் நிழலில் இருந்து தன் மீது பக்தியுடைய சனகாதி முனிவர் நால்வர்க்கு அன்று எல்லா உபதேசமும் இனிய அருளுடன் உரைத்தவன் சிவபெருமான். அவன் அமர்ந்த தளமாகிய நல்லவரால் போற்றப்பெறும் (திருநாலூர் மயானம் எனும்) கதிரேசன் சிவாலயம் சென்று புகழ்ந்து வணங்காதவர் எல்லாம் சைவ நெறியில் செல்லாது வருந்துபவராம்.

          ★ நால்வர் பாடல் பெற்ற திருத்தலமாம் கதிரேசன் ஆதி சிவாலயம் இந்த கிராமத்திற்கு (சிவனடியார்கள்) நால்வர் என்று போற்றக்கூடிய அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் இவ்வூருக்கு வந்தமையாலும் வருடத்தில் (365 -நாட்களும்) அதாவது எந்நாளும் திருவிழாக்கள் கொண்டாடி மகிழ்ந்ததால் (திரு+நாள்+ஊர்) என்பது திரு எனும் மேன்மை பொருந்தி திருமகள் வாசம் செய்யும் இடம் ஆகையால் திருநாளூர் எனும் தனி சிறப்பு பெயர் பெற்றது. 

திருநாளுர் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் கோவில் தல வரலாறுல வரலாறு :

Thirunalure pozhinchiamman temple history
Thirunalure pozhinchiammam temple

          இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டில் 1974 - க்கு முன்னர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஜில்லாவிற்கு உட்பட்டிருந்த (தற்பொழுது) | புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி வட்டத்தில், குதிரைக்கு பெயர்பெற்ற குளமங்களம். ராஜகோபுரத்தின் சிறப்பு பெற்ற கொத்தமங்கலம், மறமடஇக்கி, கரிசக்காடு. பரவாக்கோட்டை, சிட்டங்காடு, தொழுவன்காடு. ஆவணத்தான்கோட்டை இப்பகுதிகளை எல்லாம் மையமாக கொண்ட திருநாளூர் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிராம மக்கள் சிரோடும் சிறப்போடும் இன்முகத்துடனும் வாழ்ந்து வந்தனர்.

           அந்த கால கட்டத்தில் திருநாளூரின் மையப்பகுதியான வில்லுனி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பெரியகுளம் ஏரியின் பாசனப் பகுதியான |நஞ்சை நிலப்பகுதியில் வில்லுனி ஆற்றங்கரை ஓரத்தில் திடப்புளி எனும் ஓரிடம் உள்ளது. இப்பகுதியில் பெத்தி, ஆத்தா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் ஆடு, மாடு மேய்ப்பது வழக்கமாக கொண்டு இருந்தனர். ஒரு நாள் ஒரு பசு திடப்புளி என்னும் இடத்திலே ஒரு கன்று ஈன்றது. அந்த தாய்ப்பசு அது ஈன்ற கன்றை பால் அருந்த விடாமல் அதே இடத்தில் படுத்து கொண்டது. அந்தப்பசு இடை விடாமல் தொடர்ந்து கதரிக்கொண்டே இருந்தது. இரவு நேரம் ஆகியும் பசு வீடு திரும்பாததால் மக்கள் அந்த பசுவைத் தேட. ஆரம்பித்தனர். வெகு நேரம் தேடிய பின்னர் பசு கன்று ஈன்ற இடத்தினை கண்டு பிடித்தனர். ஊர் மக்கள் ஒன்று கூடி அப்பசுவினை எழச் செய்தனர். ஆனால் பசுவானது அவ்விடத்தை விட்டுச் செல்லவில்லை. அப்பொழுது அந்த கூட்டத்தில் ஒருவர்க்கு அருள்வந்து பின் வரும் அருள்வாக்கை கூறலானார்.

          நான் இந்த இடத்தில் இருக்கிறேன் தோண்டி எடுங்கள். நான் இவ்விடத்தில் இவ்வூர் மக்களுக்கு அருள்புரிய வேண்டுமென எண்ணியுள்ளேன் என்று கூற உடனே ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அவ்விடத்தைத் தோண்ட அதிலிருந்து வலது காலை மடக்கி இடதுகாலால் அசுரனின் தலையை மிதித்தபடி அசுரனை தன்னுடைய சூலாயுதத்தால் வதம் செய்தபடி எண் கரங்கள் கொண்ட அருள்மிகு அம்மன் விக்ரகம் சுயம்புவாக கிடைக்கப்பெற்றது.

Thirunalure polinchiamman kovil history

திருநாளுர் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் கோவில்

           இவ்வாறாக சுயம்புவாக கிடைக்கப்பெற்றதால் அம்மன் சிலையை இவ்வூர் மக்கள் ஒன்று கூடி வயலின் தென் கடைசியில் ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு கூரை அமைத்து சிறிது காலம் ஓலைக் குடிசையிலும், சிறிது காலம் சீமை ஓடு போட்டு தற்பொழுது ஆலயம் அமையப் பெற்றுள்ள இந்த இடத்தில் வைத்து ஊர்மக்கள் வழிபடத் தொடங்கினர். காலப்போக்கில் இந்த இடம் வழிபாட்டு தளமாக மாறி ஆலயம் அமைத்து பொன்விளையும் பூமியில் சுயம்புவாக கிடைக்கப்பெற்றதால் பொழிஞ்சியம்மன் என்ற திருநாமத்துடன் இனிதே அம்மனை வழிபட்டு வந்தனர்.

         அதன்பின்னர் ஊரில் ஒரு பெரியவரின் கனவில் அம்மன் தோன்றி தனது ஆலயத்தை விரிவு படுத்தி கோபுரம் எழுப்பும்படி கட்டளையிட்டு| மறைந்தது. இச்செய்தியினை அப்பெரியவர் ஊர் மக்களிடம் தெரியப்படுத்தினார். அதன்பின்னர் அம்மனின் திருத்தளத்தை விரிவுபடுத்த| எண்ணிய மக்கள், ஊர் மக்கள் ஆதரவோடு கோபுரம் கட்ட தீர்மானம் நிறைவேற்றி அதன்படி கோபுரமும் சிறிது காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆன்மகோடிகள் உஜ்ஜீவிக்கும் வண்ணம் மீண்டும் அம்மனின் கோபுரம் புதுப்பிக்கப்பட்டு ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 27 -ம் நாள் (12.09.1957) வியாழன் அன்று முதல் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.

             அதன்பின்னர் அம்பாளின் திருவருள் திக்கெல்லாம் பரவத் தொடங்கியது. வேண்டிய வரங்களையெல்லாம் வாரி வழங்கிய அம்பாளை தொழும் பக்தர்களின் ஆசை நிறைவேறும் வண்ணம் ஊர் மக்களும் அம்மனின் அருளைப்பெற்ற பக்தகோடிகளும் அம்மனை பரம்பரை குலதெய்வமாக வழிபட்டோரும் சேர்ந்து தீர்மானித்து மகாமண்டபம் அமைத்து கோபுரம் புதுப்பிக்கப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பி ஆலயத்தின் மறுசீரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பெற்று அம்பாளின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மங்களகரமான சுபானு வருடம் தை மாதம் 21 -ம் நாள் (04.02.2004) புதன்கிழமை அன்று இரண்டாவது கும்பாபிஷேகமும் இனிதே நடைபெற்றது.

            2009 - ஆம் ஆண்டு அம்மனின் அருள்வாக்கால் 18- அடி உயரத்தில் கருப்பர் சிலையும் 54 - அடி உயரத்தில் அம்மனின் சிலையும் அமைக்கும்படியும் மேலும் என் பெயர் சொல்லி யாரிடமும் வசூல் செய்யக்கூடாது என்றும் அம்மன் அருள்வாக்கு கூறியது.

             அதன்படி ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி வேறுபாடு இன்றி கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்க கூடிய. வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை எல்லாம் வாரி வழங்கிகொண்டு திருநாளூர் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களை எல்லாம் காத்து அருள் பாலித்து கொண்டிருக்கின்ற கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கக்கூடிய நம்மளுடைய இல்ல சுபகாரிய நிகழ்ச்சியின் அழைப்பிதழ்களில் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் துணை என்று அச்சிடப்பட்டு வெளியிடுகின்ற வடக்கே பார்த்து ஆலயம் அமையப் பெற்றுள்ள துர்க்கையின் அவதாரமான அருள்மிகு சூலப்பிடாரி பொழிஞ்சி அம்மனுக்கு ஆலயம் முன்பாக (ஆலய வாசலிலே) ஒருபுறம் 18 -அடி உயரத்தில் ஸ்ரீ கருப்பரின் திருஉருவச் சிலையும், மற்றொரு புறம் 54 -அடி உயரத்தில் ஸ்ரீ பொழிஞ்சியம்மனின் விஷ்வரூப திருஉருவச் சிலையும் அமைக்கும் திருப்பணி வேலை தொடங்கியது.

             அம்மனின் அருள் வாக்கின்படி கோவிலில் பொதுமக்கள் தானாகவே முன்வந்து கொண்டு வந்து கொடுத்த நிதியில் இருந்தே சிலை அமைக்கும் திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றது. மேலும் ஆலயத்தின் மறுசீரமைப்பு (பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப் பெற்று திருநாளூர் அருள்மிகு பொழிஞ்சியம்மனின் அருள்வாக்கின்படி திருநாளூர் மற்றும் சுற்றுவட்டார கிராம தெய்வங்களின் நல்லாசியுடனும், பரம்பரை கோவில் பூஜகர் சித.நடராஜன் (எ) சித.சாமிநாதபிள்ளை அவர்களின் முயற்சி எனும் முழு ஒத்துழைப்போடும் திருநாளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தார்கள் மற்றும் வெளிநாடு, வெளியூர் வாழ் அம்பாள் தொண்டர்களின் நல் ஆதரவோடும் பூவாண்டிப்பட்டி திரு.M.ஆறுமுகம் ஸ்தபதி அவர்களின் மூலமாக அனைத்து விதமான திருப்பணி வேலைகளும் நிறைவு பெற்றது.

Thirunalure polinchiamman kovil history
திருநாளுர் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் கோவில்

       தமிழ்விளங்கும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் மாசி மாதம் 13 -ஆம் நாள் பிப்ரவரி (25.02.2018) ஞாயிற்றுக்கிழமை காலை மிக பிரம்மாண்டமான முறையில் அருள்மிகு ஸ்ரீ பொழிஞ்சியம்மன் திருக்கோவில், 18 - அடி உயர கருப்பர் சிலை, 54 -அடி உயர அம்மன் சிலை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவும் (கும்பாபிஷேக விழாவும்) அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை விழாவும், அறுசுவை அன்னதான விழாவும் மிக சிறப்பான முறையில் இனிதே நடைபெற்றது என்பதனை மிக்க மகிழ்ச்சியோடு தெரியப்படுத்துகின்றோம்.


      ஹேவிளம்பி 1957 ல் (முதல் கும்பாபிஷேகம்) ஹேவிளம்பி 2018 முடிய 60 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். 


திருநாளுர் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் திருக்கோவிலின் [ஆலயத்தின்] சிறப்பு அம்சங்களும் திருவிழாக்களின் விபரமும்: 

           ◆பொன் விளையும் பூமியான நஞ்சை நிலப்பகுதியில் சுயம்புவாக கிடைக்கப்பெற்றதால் பொழிதல் என்ற சொல் மருவி ஸ்ரீ பொழிஞ்சியம்மன் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறாள். 

            ◆திருநாளூர் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களுக்கெல்லாம் பெருமை சேர்க்க கூடிய அளவிற்கு ஆசிய துணைக் கண்டத்திலேயே மிக உயரமான சிலைகளில் ஒன்றாக 18 -அடி உயரத்தில் ஸ்ரீ கருப்பரின் திரு உருவச்சிலையும், 54 - அடி உயரத்தில் ஸ்ரீ பொழிஞ்சியம்மனின் விஷ்வரூப திருஉருவச் சிலையும் அமையப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும்.

              ◆ஆலயம் முன்பாக ஸ்ரீ பொழிஞ்சியம்மன் கலை அரங்கம் (நாடக மேடை) அருகாமையில் சிவனுக்கு நெற்றிக்கண் திறந்தார் போல் ஒரே தேங்காயில் மூன்று கன்றுகள் உருவாகி அது பெரிய மரமாக வளர்ந்து தற்பொழுது மூன்று மரமும் காய்ப்புக்கு வந்துள்ளது என்பது இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

             ◆18 -அடி உயரத்தில் கருப்பர் வலது கையில் வெட்டருவாள் கையில் ஏந்தி வலது காலை முன் வைத்து இடது காலை பின் வைத்து காலில் காப்பு அணிந்து கழுத்தில் வாகை மாலை சூடி இடது கையில் தடியை ஊன்றியபடி வடமேற்கு திசையை நோக்கி கம்பீரமான தோற்றத்துடன் நமக்கெல்லாம் காட்சி தருகிறார்.

          ◆சிரசில் மகுடம் தாங்கி அசுரனின் வாகனமான எருமைத் தலையின் மேல் ஏறிநின்று இடப்புறம் ஒருகையில் அக்கினி ஏந்தியபடியும். ஒரு கையில் வில்லும், ஒரு கையில் கேடயமும், வதம் செய்யப்பட்ட அசுரனின் தலையை ஒருகையில் பிடித்தபடியும், வலதுபுறம் ஒருகையில் கத்தியும்" ஒருகையில் அம்பும் ஒருகையில் சூலமும் கொண்டு மாங்கல்ய தோற்றத்துடன் கழுத்தில் மாலை அணிந்தபடி கலியுக தெய்வமாக விளங்கக் கூடிய ஸ்ரீ பொழிஞ்சியம்மன் தன்னுடைய வாகனமான சிங்கத்தின் அருகில் நின்றபடி இத்தனை அம்சங்களும் அமையப்பெற்றுள்ள விஷ்வரூப அம்மனின் திருஉருவச்சிலையின் முகத்தில் இரு கோரைப்பற்கள் தெரிந்தாலும் சாந்தமான முகத்துடன் ஒரு கையால் நமக்கெல்லாம் ஆசிர்வாதம் புரியும் வண்ணம் தான் உதயமான திடப்புளியை நோக்கியபடி நமக்கெல்லாம் காட்சி தந்து திருநாளூர் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள்.

              ◆ஒவ்வொரு வருடமும் தமிழ்மாதமான சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை துவங்கி 15 - நாட்கள் அம்பாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், அபிஷேக ஆராதனை திருவிழாவும் நிகழ்ச்சிகளும் மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.

              ◆ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் காப்புகட்டி உற்சவ திருவிழா நடைபெறுவதற்கு முதல் வாரம் செவ்வாய்க்கிழமை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாளையெடுப்பு திருவிழாவும், நிகழ்ச்சிகளும் மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அன்றைய மறுதினம் புதன்கிழமை ஒவ்வொரு வருடமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைத் திருவிழாவும் நடைபெற்று வருகின்றது.

            ◆வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு மேல் 4.30 மணிக்குள்ளாக ராகுகால நேரத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் தங்களுடைய பிரார்த்தனைகளை மனதில் வேண்டி முழு நம்பிக்கையுடன் 5 -வாரம், 7-வாரம், 9- வாரம் என்று விளக்கு ஏற்றி வழிபடுவோர்க்கு தங்களுடைய பிரார்த்தனைகள் நிறைவேற ஷகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் நலமுடன் வாழ அந்த அம்பாளின் அருள் கிடைக்கும் என்பது அனைவருடைய முழு நம்பிக்கையாகும். ராகுகால பூஜை வழிபாடுகள் முடிந்த பிறகு ஆலய வளாகத்தில் அம்மனின் அருட்பிரசாதம் வழங்கப்டும்.

             ◆ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை மாலை ஆலய வளர்ச்சிப் பணிக் குழுவினர்களால் நடத்தப்படும் திருவிளக்கு பூஜையும் நிகழ்ச்சிகளும் மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.

             ◆ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதி அன்று மாலை 54 அடி உயர அம்மன் சிலைக்கு சிறப்பான முறையில் பாதபூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் தங்களுக்கு இயன்ற அளவு மலர்கள்(உதிரிப் பூ) வாங்கி வந்து தாம்பூலத்தில் வைத்து திருக்கோவிலை வலம் வந்து தங்களுடைய வேண்டுதலை மனதில் வைத்து அம்மனின் பாதத்தில் தாங்கள் கொண்டு வந்த மலர்களை தூவி அம்மனின் பாதத்தை தொட்டு வணங்கி வழிபட தங்களுடைய வேண்டுதல் நிறைவேற அந்த அம்மனின் திருவருள் கிடைக்கும். இதனால் பௌர்ணமித் தாய் எனும் சிறப்பு பெயரும் பெற்றுள்ளது என்பது மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

             ◆இந்தக் கிராமத்தில் ஒரு காலகட்டத்தில் தீராப்பிணி ஏற்பட்டாலோ, தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றாலோ ஊர் மக்கள் ஒன்று கூடி அம்பாள் மீது முழு நம்பிக்கை வைத்து அம்பாளுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தி சூலம் ஏந்தி கிராமத்தினை வலம் வந்தால் தீராப்பிணிகளும், பிரச்சினைகளும் தீரும் என்பது மக்களின் முழு நம்பிக்கை மட்டுமல்லாது உண்மை நிகழ்வு ஆகும்.

              ◆கோபுரத்தில் கோபுரம் தாங்கி நிற்கக்கூடிய (ராஜா, ராணிகள்) பொம்மைகள் மற்ற ஆலயங்களில் அமையப்பெற்றுள்ளதைக் காட்டிலும் இருபுறமும் பெண் தெய்வங்களே கோபுரத்தை தாங்கி நிற்கும்படி இந்த ஆலயத்தில் அமையப் பெற்றுள்ளது பெண்களுக்கென்று தனிசிறப்பு வாய்ந்த ஆலயமாக கருதப்படுவது இந்த ஆலயத்திற்கு மேலும் ஒரு தனி சிறப்பு அம்சமாகும்.

             ◆இதே கிராமத்தில் தான் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் திருக்கோவிலின் வடமேற்கு திசையில் வில்லுனி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பெரியகுளம் ஏரியின் அருகே 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க திருஞானசம்மந்தர் தேவாரம் பாடி புகழ்பெற்ற ஆதிசிவன் கதிரேசன் சிவாலயமும் இருந்துள்ளது. காலப்போக்கில் அழியப்பெற்று மீண்டும் தற்பொழுது அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு தற்பொழுது வழிபாட்டு தலமாக மாறி வருகிறது. இந்த ஆலயத்தில் சூரிய கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார தலமாக விளங்கியதாக முன்னோர்கள் மூலமாக கருதப்படுகிறது என்பது இந்த கிராமத்திற்கு மேலும் ஒரு தனி சிறப்பு அம்சமாகும்.


திருநாளுர் ஸ்ரீ பொழிஞ்சியம்மன் திருக்கோவில் செல்ல பேருந்து வசதி  நிறுத்தம் :

 முகவரி: 
திருநாளுர் கிராமம், 
அறந்தாங்கி தாலுக்கா,
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி,
புதுக்கோட்டை மாவட்டம்.
தமிழ்நாடு மாநிலம்
இந்தியா.

1. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மறமடக்கி ஆவணத்தான்கோட்டை வழியாக அறந்தாங்கி செல்லும் சாலையில் திருநாளூர் வடக்கு, ஸ்ரீ பொழிஞ்சியம்மன் திருக்கோலில் நுழைவுவாயில் உண்டியல் பேருந்து நிறுத்தம்.


2.அறந்தாங்கியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் வடதிசையில் ஆவணத்தான்கோட்டை மறமடக்கி வழியாக ஆலங்குடி செல்லும் சாலை திருநாளூர் தெற்கு காலனி பேருந்து நிறுத்தம். கிழே google location பதிவிடபட்டுள்ளது

Thirunalure polinchiamman kovil google locatiion 

Thirunalure polinchiamman kovil google locatiion https://maps.app.goo.gl/3nDAG5hMsrqB4bPo6

குறிப்பு :

         வாரந்தோறும் திங்கள், வெள்ளி மாலை நேரத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெறும். வழிபாட்டு தொடர்புக்கு (அர்ச்சகர்) : 9442660974. ஊர் கிராமத்தார்கள், நகரத்தார்கள், ஊர் அம்பலகாரர்கள்,

...சுபம்...




Previous
Next Post »

1 comments:

Click here for comments
Anonymous
admin
12/7/22, 2:38 PM ×

What other machine could assemble a door, a spinning wheel rim, an electronic guitar, and a dental crown in a matter of hours? CNC know-how has raised the bar for manufacturing in high precision machining all specialized fields and fashions and is just becoming better. Although wood and sheet metallic are frequently made utilizing CNC companies, they are capable of producing far more. Even dental crowns and implants could also be} carved out utilizing CNC software since the that} know-how is so accurate.

Congrats bro Anonymous you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar

Leave your comments ConversionConversion EmoticonEmoticon